குறள் (Kural) - 616

குறள் (Kural) 616
குறள் #616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

Tamil Transliteration
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum.

மு.வரதராசனார்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

கலைஞர்

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

பரிமேலழகர்

முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முயற்சி திருவினை ஆக்கும் -விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும் -அம்முயற்சியில்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்திவிடும். அரசனுக்குப் படைகுடி கூழமைச்சு நட்பரண்களும் நாடும் சிற்றரசும் செல்வமாகக் கருதப்பெறும். வறுமை அவற்றின் குறைவும் அரசிழப்புமாகும்.

மணக்குடவர்

முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

புலியூர்க் கேசிகன்

இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)