குறள் (Kural) - 615

குறள் (Kural) 615
குறள் #615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள்
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

Tamil Transliteration
Inpam Vizhaiyaan Vinaivizhaivaan Thankelir
Thunpam Thutaiththoondrum Thoon.

மு.வரதராசனார்

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

சாலமன் பாப்பையா

இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

கலைஞர்

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

பரிமேலழகர்

இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இன்பம் விழையான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினை முடித்தலையே விரும்புகின்றவன்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்- தன் சுற்றமாகிய பொறையின் (பாரத்தின்) வறுமையைப் போக்கி அதைத் தாங்கும் தூணாவன். விடா முயற்சியுடையான் மெய்வருத்தம் பாரானாதலின் ' இன்பம் விழையான் ' என்றும் , தன்னலங் கருதாது முயற்சியால் வினை முடித்துப் பெரும்பொருள் பெற்றவன் தன் கிளைஞரைப் பேணுவானாதலின், 'தன்கேளிர்....தூண்' என்றும் ,கூறினார். 'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் -செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணணாயி னார்' . (நீதிநெறி.53). "செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (வெ.வே.3). என்பதால் ,கிளைஞரைத் தூண்போல் தாங்குதல் செல்வர் கடமையென்பது பெறப்படும் . 'துடைத்து' என்பது வறுமையை அறவே நீக்குதலையும் , 'ஊன்றுந்தூண்' நிலையாகத் தாங்குதலையும் குறிக்கும். இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐம்புலத்துள் ஒக்கலும் ஒன்றாதல் காண்க (குறள்.43). கேளிரைப் பொறையாக வுருவகியாமையால் இதில் வந்துள்ள அணி ஒருமருங்குருவகம்.

மணக்குடவர்

தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.

புலியூர்க் கேசிகன்

தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)