குறள் (Kural) - 614

குறள் (Kural) 614
குறள் #614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

பொருள்
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

Tamil Transliteration
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum.

மு.வரதராசனார்

முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

சாலமன் பாப்பையா

முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

கலைஞர்

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

பரிமேலழகர்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் ; பேடிகை வாள் ஆண்மை போலக் கெடும் - போருக்கு அஞ்சும்பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ளவாளைப் பயன்படுத்துதல் போல் இல்செயலாம். பேடிக்கு வாளாண்மை இல்லாததுபோல ,விடா முயற்சியில்லானுக்குத் தாளாண்மை யில்லை யென்பதாம். ஆண்மை - ஆளுந்தன்மை. ஆளுதல் - பயன்படுத்துதல் . 'வாளாண்மை' யென்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மையென்று சிலர் உரைத்திருப்பதாகத் தெரிகின்றது. அது வேறு ஆண்மை யுண்மையைக் குறிப்பதால் ,அது உரையன்மை அறிக. பெள் -பெண் -பெண் -பேடு -பேடன் , பேடி. ஆண்டன்மையை விரும்பும் பெண் பேடன்; பெண்டன்மையை விரும்பும் ஆண்பேடி . இப்பாகுபாடு பாலுறவு பற்றியதேயன்றிப் போர்மறம் பற்றிய தன்று .பேடியருள் போர்மறம் உள்ளவரும் உளர்; இல்லாதவரும் உளர். இங்குக் குறிக்கப்பட்ட பேடி அஃதில்லாத வகையென அறிக. பேடிக்கு வாளைப்போரிலாள விருப்ப மிருப்பினும் அச்சத்தாற் கூடாமை போல, விடாமுயற்சி யில்லானுக்கு வேளாண்மைமேல் விருப்பமிருப்பினும் வறுமையாற் கூடா தென்பதை யுணர்த்தற்கு ,இல்லை யென்னாது 'கெடும்' என்றார்.

மணக்குடவர்

முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.

புலியூர்க் கேசிகன்

போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)