குறள் (Kural) - 613

குறள் (Kural) 613
குறள் #613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

பொருள்
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

Tamil Transliteration
Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku.

மு.வரதராசனார்

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

சாலமன் பாப்பையா

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

கலைஞர்

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

பரிமேலழகர்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் நன்றிசெய்தல் என்னும் பெருமிதம் ; தாளாண்மை என்னும் தகைமைக் கண்ணே தங்கிற்று - விடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம். வெறுங்கையால் வேளாண்மை செய்தல் கூடாமையின் , வேளாண்மைக்கு இன்றியமையாத பொருள் தாளாண்மையாலேயே வருதல் பற்றி 'தகைமைக்கட்டங்கிற்றே' என்றார் . பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

மணக்குடவர்

முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.

புலியூர்க் கேசிகன்

‘எல்லாருக்கும் உதவி செய்தல்’ என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai)