குறள் (Kural) - 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
பொருள்
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
Tamil Transliteration
Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku.
மு.வரதராசனார்
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
கலைஞர்
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
பரிமேலழகர்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
ஞா.தேவநேயப் பாவாணர்
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தது - இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது ; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - ஆதலால் , எடுத்துக் கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யா திருத்தலை ஒழிக. நிறை என்பதன் மறுதலையான குறையென்னுஞ்சொல் , ஒரு பொருள் அல்லது உறுப்பு இல்லாக் குறையை முதலிற் குறித்து , பின்பு அக்குறையால் ஏற்படும் தேவையையும் தேவையான பொருளையும் ஆகுபெயராக வுணர்த்திற்று . 'ஓம்பல்' என்றது நேராவாறு காத்தலை , தீர்ந்தன்று என்பது செய்தன்று என்னும் வாய்பாட்டு வினைமுற்று . செய்தனது - செய்தன்று (ஒருமை) , செய்தன (பன்மை) . உலகு ஆகுபெயர்.
மணக்குடவர்
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
புலியூர்க் கேசிகன்
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) |