குறள் (Kural) - 592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
பொருள்
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
Tamil Transliteration
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum.
மு.வரதராசனார்
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
சாலமன் பாப்பையா
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
கலைஞர்
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
பரிமேலழகர்
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உள்ளம் உடைமை உடைமை - முயற்சியுள்ள முடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது ; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றப் பொருளுடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நீங்கிவிடும். ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ்செல்வமும் பாதுகாக்கப்படும். 'குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்' . ஊக்கம் உள்ளப்பண்பாதலின் அதை ஒருவரும் கவரமுடியாது . செல்வம் இயற்கையினாலும் செயற்கையினாலும் பல்வேறு வகையில் அழிந்துபோம் . ஆதலால் உண்மையான வுடைமை ஊக்கமே என்பதாம் . 'உள்ளம்' ஆகுபெயர் அன்று. அது ஊக்கம் என்பதன் ஒருபொருள் மறுசொல் . உள் - உய் - உயல் - உயற்று - உஞற்று = முயற்சி . ஒ. நோ : முயல் - முயற்று. உள்ளுதல் முன்தள்ளுதல். உள் - உள்ளம். மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல் உள்ளிருப்பது என்று பொருள்படுதலால் அது வேறாம்.
மணக்குடவர்
உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
புலியூர்க் கேசிகன்
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊக்கம் உடைமை (Ookkamutaimai) |