குறள் (Kural) - 591

குறள் (Kural) 591
குறள் #591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

பொருள்
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

Tamil Transliteration
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru.

மு.வரதராசனார்

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.

சாலமன் பாப்பையா

ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.

கலைஞர்

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

பரிமேலழகர்

உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃதில்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்' மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உடையர் எனப்படுவது ஊக்கம் -ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லக் கரணியமாயிருப்பது முயற்சியுள்ளம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ ? ஆகார். வேறுடையது என்றது முதுசொம் எனப்படும் முன்னோர் தேட்டை . காக்கும் ஆற்றலின்மையால் அதையும் இழப்பர் என்பதாம் . எச்சவும்மை தொக்கது

மணக்குடவர்

ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.

புலியூர்க் கேசிகன்

ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஊக்கம் உடைமை (Ookkamutaimai)