குறள் (Kural) - 566

குறள் (Kural) 566
குறள் #566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

பொருள்
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

Tamil Transliteration
Katunjollan Kannilan Aayin Netunjelvam
Neetindri Aange Ketum.

மு.வரதராசனார்

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

சாலமன் பாப்பையா

சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

கலைஞர்

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

பரிமேலழகர்

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். '(வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கடுஞ்சொல்லன் கண் இலன் ஆயின் -அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்- அவனது பெருஞ்செல்வம் நீடித்த லின்றி அப்பொழுதே கெடும். கடுஞ்சொல்லும் கண்ணோட்டமின்மையும் குடிகட்கு அச்சத்தை விளைத்தலின், வெருவந்த செயல்களாயின.'கண்' ஆகுபெயர். விரைந்தழியத்தகாத பெருஞ்செல்வமாயினும் என்பார்-'நெடுஞ்செல்வம்' என்றார். இனி, நீண்ட காலமாகத் தொகுக்கப் பெற்ற முன்னோர் செல்வம் எனினுமாம். ஏகாரம் பிரிநிலை. இதுகாறும் நாற்குறள்களால் குடிகளஞ்சும் வினைகளும் அவற்றின் தீய விளைவுகளும் கூறப்பட்டன.

மணக்குடவர்

அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும். இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது

புலியூர்க் கேசிகன்

கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai)