குறள் (Kural) - 567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
பொருள்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
Tamil Transliteration
Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan
Atumuran Theykkum Aram.
மு.வரதராசனார்
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
சாலமன் பாப்பையா
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.
கலைஞர்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
பரிமேலழகர்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் - கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம். (கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை,கண்ணோட்டம் இன்மை , கடுஞ்சொற்சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம்கூறப்பட்டன.
ஞா.தேவநேயப் பாவாணர்
கடுமொழியும் கையிகந்த தண்டமும் -பொறுக்கத்தகாத கடுஞ்சொல்லும் குற்றத்தின் அளவிற்கு மிஞ்சிய தண்டனையும் ; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகையை வெல்லுதற்கேற்ற வலிமையாகிய இரும்பைத் தேய்த்தழிக்கும் அரமாம். கடுஞ்சொல்லாலும் கரைகடந்த தண்டத்தாலும், குடிகளும் வினை செய்வாரும் அன்புகுன்றி அரசனது வலிமை சுருங்கிவருமாதலால், அவ்விரண்டையும் அரமாகவுருவகித்து, 'அடுமுரண்' எவ்வளவு வலியதாயினும் அழிந்துபோம் என்பதை ,திண்ணிய இரும்பையும் அரம்தேய்த்துவிடும் என்னும் உவமையாற் பெறவைத்தார்.கடுமொழியையுங் கையிகந்த தண்டத்தையும் ஈரரமாகவோ இருபுறமும் அராவும் ஓரரமாகவோ கொள்க.இக்குறளால் குடிகளும் வினைசெய்வாரும் அஞ்சும் வினைகள் கூறப்பட்டன. அடுமுரணை இரும்பாக வுருவகிக்காமையால் இதில் வந்துள்ளது ஒருமருங்குருவகம்.
மணக்குடவர்
கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம். இது வலியைக் கெடுக்கும் என்றது.
புலியூர்க் கேசிகன்
கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) |