குறள் (Kural) - 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
பொருள்
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
Tamil Transliteration
Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam
Peeykan Tannadhu Utaiththu.
மு.வரதராசனார்
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
சாலமன் பாப்பையா
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.
கலைஞர்
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
பரிமேலழகர்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அருஞ் செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் -காண விரும்பிய குடிகட்கு எளிதாய்க் காணப்படாதவனாகவும் அரிதிற் கண்டவர்க்கும் சுடுமுகத்தனாகவுமிருக்கும் அரசனின் பெருஞ்செல்வம்; பேய்கண்ட அன்னது உடைத்து-பூதங் காத்தாற் போன்ற தன்மையை உடையது. அரசன் செல்வம் குடிகட்குப்பயன் படாமையாலும் அண்டுதற்கிடமின்மையாலும் பேய்காத்தாற் போன்றதென்றார். செவ்வி பார்க்கத்தக்க செவ்வையான நிலை. அருமை-எளிதாய்க்கிட்டாமை. 'பேஎய்' இசைநிறை யளபெடை. செவ்வியருமையை அருஞ்செவ்வி யென்றது செய்யுள் நடை.
மணக்குடவர்
காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.
புலியூர்க் கேசிகன்
எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai) |