குறள் (Kural) - 564

குறள் (Kural) 564
குறள் #564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

பொருள்
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

Tamil Transliteration
Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan
Uraikatuki Ollaik Ketum.

மு.வரதராசனார்

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

கலைஞர்

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

பரிமேலழகர்

இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், உறை கடுகி ஒல்லைக்கெடும் - ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும். (நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இறை கடியன் என்று உரைக்கும் ; இன்னாச்சொல் வேந்தன்-நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருந் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான். இன்னாச்சொல் உளம் நொந்து உரைக்கும் சொல். 'உறை' முதனிலைத் தொழிலாகு பெயர். உறைதல்-தங்குதல் அல்லது குடியிருத்தல்.

மணக்குடவர்

தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும். இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.

புலியூர்க் கேசிகன்

‘எம் அரசன் கடுமையானவன்’ என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai)