குறள் (Kural) - 563

குறள் (Kural) 563
குறள் #563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

பொருள்
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

Tamil Transliteration
Veruvandha Seydhozhukum Vengola Naayin
Oruvandham Ollaik Ketum.

மு.வரதராசனார்

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

கலைஞர்

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

பரிமேலழகர்

வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வெருவந்த செய்து ஒழுகும் வெம்கோலன் ஆயின் -அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் -உறுதியாக விரைந்து கெடுவான்.ஒரு வந்தம்-ஒரு தலை.

மணக்குடவர்

அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

புலியூர்க் கேசிகன்

குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai)