குறள் (Kural) - 562

குறள் (Kural) 562
குறள் #562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

பொருள்
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

Tamil Transliteration
Katidhochchi Mella Erika Netidhaakkam
Neengaamai Ventu Pavar.

மு.வரதராசனார்

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

கலைஞர்

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

பரிமேலழகர்

கடிது ஒச்சி - அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி, மெல்ல எறிக - செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார். (கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்- ஆட்சிச் செல்வம் தங்களிடம் நெடுங்காலம் நிற்றலை விரும்பும் அரசர்; கடிது ஓச்சி-குற்றவாளியைத் தண்டிக்கும் போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி ; மெல்ல எறிக- மென்மையாகச் செய்க. கல்லை அல்லது வேலை எறிபவன் கையை மிகவுயர்த்திப் பின்பு தாழ்த்தி மெல்ல எறிவதுபோல, தண்டனையை அளவிறந்து செய்வது போற்காட்டுவது குற்றவாளி அஞ்சுதற் பொருட்டும், அளவாகச் செய்வது குடிகள் அஞ்சாமைப் பொருட்டும், வேண்டுமென்பதாம்.

மணக்குடவர்

கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது; கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை (Veruvandhaseyyaamai)