குறள் (Kural) - 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
பொருள்
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
Tamil Transliteration
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti.
மு.வரதராசனார்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
கலைஞர்
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
பரிமேலழகர்
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் . நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம். "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் , யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126) என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .
மணக்குடவர்
உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.
புலியூர்க் கேசிகன்
மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | செங்கோன்மை (Sengonmai) |