குறள் (Kural) - 541

குறள் (Kural) 541
குறள் #541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

Tamil Transliteration
Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum
Therndhusey Vaqdhe Murai.

மு.வரதராசனார்

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

சாலமன் பாப்பையா

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.

கலைஞர்

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

பரிமேலழகர்

ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். (நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஓர்ந்து - தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து ; யார்மாட்டும் கண்ணோடாது - எவரிடத்தும் சிறப்பாக அன்பு கொள்ளாது ; இறை புரிந்து - நடுநிலை பொருந்தி ; தேர்ந்து - அக்குற்றங்கட்கேற்ற தண்டனைகளை அறநூலறிஞரொடு நூலுத்தி பட்டறிவொடு பொருந்தத் தீர்மானித்து ; செய்வஃதே முறை - அவற்றை நிறைவேற்றுவதே செங்கோல் முறையாம். நடுநிலை இறைக்கு (அரசனுக்கு) இன்றியமையாத குணமாகலின் அதை 'இறை' யென்றும் , உயிரினுஞ் சிறந்தாரிடத்தும் கண்ணோட்டம் தகாதென்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார் . இறைமை யென்பது இறையெனக் குறைந்தும் , செய்வது என்பது செய்வஃது என விரிந்தும் நின்றன. செய்யுளமைதி நோக்கி. இதனால் செங்கோன்மை யிலக்கணங் கூறப்பட்டது.

மணக்குடவர்

ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும். யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.

புலியூர்க் கேசிகன்

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)