குறள் (Kural) - 535

குறள் (Kural) 535
குறள் #535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

பொருள்
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

Tamil Transliteration
Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai
Pinnooru Irangi Vitum.

மு.வரதராசனார்

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

சாலமன் பாப்பையா

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

கலைஞர்

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

பரிமேலழகர்

முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். (காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முன் உறக்காவாது இழுக்கியான் - தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான். காக்கவேண்டிய துன்பங்கள் ; பகைவர் சோர்வு பார்த்துச் செய்வனவும் பஞ்சம் வெள்ளம் முதலியனவுமாம் . ஊற்றின்கண் என்பது உருபுஞ் சாரியையும் உடன்தொக்கு நின்றது . விடுதல் நீங்குதல்; இங்கு அழிதல்.

மணக்குடவர்

தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.

புலியூர்க் கேசிகன்

துன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (Pochchaavaamai)