குறள் (Kural) - 536

குறள் (Kural) 536
குறள் #536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

பொருள்
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

Tamil Transliteration
Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai
Vaayin Adhuvoppadhu Il.

மு.வரதராசனார்

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

கலைஞர்

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

பரிமேலழகர்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின், அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. (வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும் , தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் வழுக்காமை 'என்றும்' கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்: நேர்படுதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்குமாயின்; அது ஒப்பது இல் - அது போன்ற நன்மை வேறொன்று மில்லை. செய்ய வேண்டிய வினைகளை உறவினரிடத்தும் பிறரிடத்தும் ஒப்பச் செய்ய வேண்டுமாதலின் யார்மாட்டும் என்றும், பெருகிய நிலையிலும் சுருங்கிய நிலையிலும் ஒருதன்மையாகச் செய்ய வேண்டுதலின் 'என்றும்' என்றும் , எல்லா வினைகளிலும் தப்பாது கையாள வேண்டுதலின் வழுக்காமை என்றும் , கூறினார் . 'வாய்' என்னும் வினை 'வாய்ந்தன ரென்ப' (தொல். 1582) , 'வாய்ந்தமலையும்' ( குறள் . 737) என்று மெலிந்தும் புடைபெயர்தலாலும் , செயப்படு பொருள் குன்றிய வினையாதலாலும் , 'வாயி' னென்பது முதனிலைத் தொழிற்பெயரடியாக வந்த வினை யெச்சம் என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாது.

மணக்குடவர்

யாவர்மாட்டும் எல்லாநாளும் தப்புச்செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின் அதனையொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை. இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (Pochchaavaamai)