குறள் (Kural) - 534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
பொருள்
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.
Tamil Transliteration
Achcha Mutaiyaarkku Aranillai Aangillai
Pochchaap Putaiyaarkku Nanku.
மு.வரதராசனார்
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
கலைஞர்
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.
பரிமேலழகர்
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை - உள்ளத்தில் அச்சமுடையவர்க்கு மதில் காடு மலை முதலிய அரண்களிருப்பினும் அவற்றாற் பயனில்லை ; ஆங்கு - அதுபோல ; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை - மறவியுடையார்க்குப் படை செல்வம் முதலிய நலங்களிருந்தும் அவற்றாற் பயனில்லை. அச்ச முடையார்க்கு அழிவு நேர்வது போல் மறவியுடையார்க்கும் நேர்வது உறுதி என்பது கருத்து. நன்மைக்கேது வானது நன்கு . நல் - நன் - நன்கு.
மணக்குடவர்
அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை. இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.
புலியூர்க் கேசிகன்
அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொச்சாவாமை (Pochchaavaamai) |