குறள் (Kural) - 533

குறள் (Kural) 533
குறள் #533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

பொருள்
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

Tamil Transliteration
Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu
Eppaalnoo Lorkkum Thunivu.

மு.வரதராசனார்

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

சாலமன் பாப்பையா

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

கலைஞர்

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

பரிமேலழகர்

பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மைக்கருத்து அறநூலார்க்கு மட்டு மன்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம். இந்நெறிமை ( விதி ) அரசர்க்கு மட்டு மன்றி எல்லாத்தொழிலாளர்க்கும் ஒப்ப வுரியதாயிருத்தலால் , 'உலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு' என்றார் . இங்கு உலகம் என்றது தமிழகத்தை . எப்பால் நூலென்றதும் தமிழிலக்கியத் துறைகளையே . இன்றிறந்துபட்டுள்ள பண்டைத் தமிழிலக்கியத்திற் பெரும்பகுதி திருவள்ளுவர் காலத்தில் இறவாதிருந்தது . வடநூலார்க்குந் துணிவு என்று கூறாமையை நோக்குக.

மணக்குடவர்

பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.

புலியூர்க் கேசிகன்

மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (Pochchaavaamai)