குறள் (Kural) - 532

குறள் (Kural) 532
குறள் #532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

Tamil Transliteration
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu.

மு.வரதராசனார்

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

கலைஞர்

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

பரிமேலழகர்

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நிச்சநிரப்பு அறிவினைக் கொன்ற ஆங்கு - நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; பொச்சாப்பு புகழைக் கொல்லும் - மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும். நிச்சநிரப்பாவது நாள்தோறும் வருந்தி இரந்துண்ணும் நிலைமை. 'அன்ன மொடுங்கினால் அஞ்சு மொடுங்கும்'.ஆதலாலும், "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்". (குறள் . 1046) ஆதலாலும், நிலையான வறுமை ஒருவனது அறிவைக் கெடுக்கும். அதுபோல் மறவியும் தற்காப்பின்மையாலும் கருமக்கேட்டாலும் அரசனது புகழை அழிக்கும் . வறுமையை நிரப்பென்பது மங்கல வழக்கான எதிர்மறைக் குறிப்பு .

மணக்குடவர்

மறவியாகின்றது புகழைக்கொல்லும்: நாடோறும் இரவால் வருந்தி வயிற்றை நிறைக்கும் ஊண் அறிவைக் கொல்லுமாறு போல. இவை மூன்றினாலும் பொருளின்கண் கடைப்பிடித்தல் கூறினார்.

புலியூர்க் கேசிகன்

நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)பொச்சாவாமை (Pochchaavaamai)