குறள் (Kural) - 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை
மகிழ்ச்சியிற் சோர்வு.
பொருள்
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
Tamil Transliteration
Irandha Vekuliyin Theedhe Sirandha
Uvakai Makizhchchiyir Sorvu.
மு.வரதராசனார்
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
கலைஞர்
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
பரிமேலழகர்
சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. (மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும், இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)
ஞா.தேவநேயப் பாவாணர்
சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு - மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அள விறந்த எரிசினத்திலும் தீயதாம். சிறந்தவுவகை பெருஞ்செல்வம் , இடைவிடா இன்ப நுகர்ச்சி, பெரும்புகழ் முதலியவற்றால் நேர்வது . அளவான வெகுளி பகைவரை யொடுக்குதற்கும் கொடியோரைத் தண்டித்தற்கும் வேண்டுவதாம். அளவிறந்த வெகுளி ஒருகால் கடும்பகைவரைக் கொல்ல உதவலாம். ஆயின், வினைச் சோர்வு தன்னையே கொல்லுதலால் அதனினுந் தீயதாயிற்று.
மணக்குடவர்
மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் செய்யும்; மிக்க உவகைக்களிப்பினால் வரும் மறப்பு. தனக்குச் சிறந்த உவகை தன்மகிழ்ச்சியாற் சோருஞ் சோர்வு என்றும், உய்க்க வேண்டுமவரிடத்து உய்க்கும் உவகை என்றுமாம்.
புலியூர்க் கேசிகன்
சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | பொச்சாவாமை (Pochchaavaamai) |