குறள் (Kural) - 526

குறள் (Kural) 526
குறள் #526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

பொருள்
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

Tamil Transliteration
Perungotaiyaan Penaan Vekuli Avanin
Marungutaiyaar Maanilaththu Il.

மு.வரதராசனார்

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

சாலமன் பாப்பையா

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

கலைஞர்

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

பரிமேலழகர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாயிருப்பின் ; அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ்வுலகத்தில் இல்லை. பெருங்கொடை வறுமை நீங்குமளவு கொடுப்பது . சினத்தொடு கொடுப்பின் கொடைத்தன்மை கெடுமாதலின், 'வெகுளிபேணான் 'என்றார்.

மணக்குடவர்

மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.

புலியூர்க் கேசிகன்

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)