குறள் (Kural) - 525

குறள் (Kural) 525
குறள் #525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

பொருள்
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

Tamil Transliteration
Kotuththalum Insolum Aatrin Atukkiya
Sutraththaal Sutrap Patum.

மு.வரதராசனார்

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

சாலமன் பாப்பையா

ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

கலைஞர்

வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

பரிமேலழகர்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும். (இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் சொல்லுதலையும் ஆற்ற வல்லனாயின் ; அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் - அவன் ஒன்றோடொன்றாகத் தொடர்ந்த பலவகை யுறவினத்தாற் சூழப்படுவான். இரண்டும் ஒருங்கே யாற்றுதல் அரிதென்பது தோன்ற 'ஆற்றின் 'என்றார். அடுக்கிய சுற்றமாவது சுற்றத்தின் சுற்றமும் அதனது சுற்றமுமாகத் தொடர்ந்து படர்ந்து செல்வது. கொடையும் இன்சொலும் தமிழவேந்தர் ஆரியரிடத்தினின்று கற்றதுபோல். "இவ்வுபாயங்களை வடநூலார் தானமுஞ் சாமமுமென்ப," என்பர் பரிமேலழகர்.

மணக்குடவர்

வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின் தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன். இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)