குறள் (Kural) - 527

குறள் (Kural) 527
குறள் #527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

பொருள்
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

Tamil Transliteration
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula.

மு.வரதராசனார்

காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சாலமன் பாப்பையா

காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

கலைஞர்

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

பரிமேலழகர்

காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன. அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம்உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும்நுகருமாறு வைத்தல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

காக்கை கரவா கரைந்து உண்ணும் - காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும் ; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம். சுற்றத்தோடு நுகருஞ் செல்வங்கள் பேரளவின; பல்வகையின; பொதுவுடைமை போல்வன . காக்கைத் தன்மைகள் அன்பு , ஒற்றுமை , கூட்டுறவு முதலியன . 'காக்கை', 'ஆக்கம்', பால்பகா வஃறிணைப் பெயர்கள். ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர்

காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.

புலியூர்க் கேசிகன்

காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)