குறள் (Kural) - 524

குறள் (Kural) 524
குறள் #524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

பொருள்
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

Tamil Transliteration
Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan
Petraththaal Petra Payan.

மு.வரதராசனார்

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா

தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

கலைஞர்

தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

பரிமேலழகர்

செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வம் பெற்றத்தான் பெற்ற பயன் - ஒருவன் செல்வம் பெற்றதனாற் பெற்ற பயனாவது ; சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் உறவினத்தால் தான் சூழப்படும் வகை அதைத் தழுவி யொழுகுதலாம். சுற்றத்தாற் பெறும் பயன் செல்வமென்று மேற்கூறியவர் , இங்குச் செல்வத்தாற் பெறும்பயன் சுற்றமென்று மறுதலை நயம்படக் கூறினார் . அரசனுக்குச் சுற்றத்தாற் செல்வம் மட்டு மன்றிப் பாது காப்பும் ஆட்சித்துணையும் ஏற்படுவதால் , அரசன் சுற்றந்தழுவுவதாற் சுற்றத்திற் குண்டாகும் நன்மையினும் அரசனுக்குண்டாகும் நன்மை பெரிதென்பதாம் . பெற்றது - பெற்றதால் - பெற்றத்தால் . பெற்றதால் என்பது எதுகைநோக்கி விரிந்தது. அது - அத்து. 'பெற்ற' வென்பதனுள் அகரமும் , அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன , என்பர் பரிமேலழகர் !

மணக்குடவர்

சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன். இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)