குறள் (Kural) - 523

குறள் (Kural) 523
குறள் #523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

பொருள்
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

Tamil Transliteration
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak
Kotindri Neernirain Thatru.

மு.வரதராசனார்

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

கலைஞர்

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

பரிமேலழகர்

செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - உறவினத் தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வவாழ்க்கை ; குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்த அற்று - குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும். கரையில்லாத குளத்துநீர் காப்பின்றி வெளிச்சென்று விடுவது போல , உறவின மில்லாதவன் செல்வழுங் காப்பாரின்றிப் பிறர் கைப்பட்டு விடும் என்பதாம் . உறவினத்தொடு என்பது அதிகாரத்தால் வந்தது . அளவுதல் - கலத்தல் அல்லது கலந்துபேசுதல் . 'அளாவு' அளவு என்பதன் நீட்டம் . அளவளாவு(தல்) என்பது அளப்பள(த்தல்) என்பது போல் பெயரும் வினையுஞ் சேர்ந்த கூட்டுச்சொல் .அது இங்கு முதனிலைத் தொழிற்பெயராக நின்றது . வாழ்க்கை யென்றது செல்வத்தோடு கூடிய நல்வாழ்க்கை , நிறைதல் என்பது குளத்திற்கும் நீர்க்கும் பொதுவினையாதலின் , 'நீர் நிறைந்தற்று' , என்பது நீரால் நிறைந்தற்று என்னும் பொருள் படநின்றது . 'ஆன்றோர் அறிவுநிறைந்தோர்' என்னுந்தொடரமை தியை இதனொடு ஒப்புநோக்குக.

மணக்குடவர்

கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும். இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)