குறள் (Kural) - 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
பொருள்
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
Tamil Transliteration
Virupparaach Chutram Iyaiyin Arupparaa
Aakkam Palavum Tharum.
மு.வரதராசனார்
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
கலைஞர்
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.
பரிமேலழகர்
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் ; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும். அன்பார்ந்த உறவினர் பல்வகைச் செல்வத்தையுங் காத்து வளர்ப்பராதலின் , 'ஆக்கம் பலவுந் தரும்' என்றார் . 'உற்றோரெல்லாம் உறவின ரல்லர்' . ஆதலின் , 'விருப்பறாச் சுற்றம்' என்றும் , மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வத்தை 'அருப்பறா வாக்கம்' என்றும் கூறினார் . 'இயையின்' என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது . அரும்புதல் - தோன்றுதல் . விரும்பு - விருப்பு . அரும்பு - அருப்பு. ஆக்கம் தொழிலாகுபெயர்.
மணக்குடவர்
அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.
புலியூர்க் கேசிகன்
அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | சுற்றந் தழால் (Sutrandhazhaal) |