குறள் (Kural) - 521

குறள் (Kural) 521
குறள் #521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

பொருள்
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

Tamil Transliteration
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula.

மு.வரதராசனார்

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

சாலமன் பாப்பையா

ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

கலைஞர்

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

பரிமேலழகர்

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் அல்லது அதிகாரம் தொலைந்து வறியனானதின் விளைவாகத் தொடர்பு நீங்கிய விடத்தும் , அவனொடு தமக்கிருந்த பழையவுறவைச் சொல்லிப்பாராட்டும் இயல்புகள் ; சுற்றத்தார் கண்ணே உள - உறவினரிடத்திலேயே உள்ளன. 'பழைமை' பழைய இன உறவாட்டு ; ஆகுபெயர். நண்பரும் வறியாரும் நன்மை பெற்றிருப்பராதலின் ; இங்குப் பழைமையென்றது பழைய இனவுறவுநிகழ்ச்சிகளையே , உம்மை இறந்தது தழுவிய எச்சம்; சிறப்பன்று. ஏகாரம் பிரிநிலை; தேற்றமன்று. பற்றறாத போதுமட்டுமன்றிப் பற்றற்ற போதும் என்றும் , சுற்றத்தாரிடத்திலேயே என்றும் , பொருள்படுவதை நோக்கி யுணர்க.

மணக்குடவர்

பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால் (Sutrandhazhaal)