குறள் (Kural) - 519

குறள் (Kural) 519
குறள் #519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

பொருள்
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

Tamil Transliteration
Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka
Ninaippaanai Neengum Thiru.

மு.வரதராசனார்

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

கலைஞர்

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

பரிமேலழகர்

வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வினைக்கண் வினை உடையான் கேண்மை - தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரமும் முழுமுயற்சியுடன் செய்து வருபவன் அவ்வுரிமை பற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவதை ; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - பொறாமைக்காரர் கோட்சொல்லைக்கேட்டு அரசன் வேறுபடக் கருதுவானாயின் , திருமகள் அவனைவிட்டு நீங்குவாள். உறவுபோல் ஒழுகுதலாவது அரசன் குடும்பவினைகளிற் கலந்து கொள்ளுதல் . அதை மதிப்புக் கேடாகக் கொண்டு அரசன் அவனைத் தண்டிக்கக் கருதுவானாயின் , அவன்போல் முழுப்பொறுப்பேற்று உண்மையாக வுழைப்பவர் வேறொருவரு மின்மையால், அரசன் செல்வங்கெடு மென்பதாம் . "திரு" ஆகுபெயர்.

மணக்குடவர்

வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.

புலியூர்க் கேசிகன்

எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal)