குறள் (Kural) - 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
பொருள்
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
Tamil Transliteration
Vinaik Kurimai Naatiya Pindrai Avanai
Adharkuriya Naakach Cheyal.
மு.வரதராசனார்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
கலைஞர்
ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.
பரிமேலழகர்
வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
வினைக்கு உரிமை நாடிய பின்றை - அரசன் ஒருவனை ஒருவினை செய்தற்குரியவனாக ஆராய்ந்து துணிந்தபின் ; அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அவ்வினைக்கு முழுவுரிமையும் உடையவனாகச் செய்க. 'வினைக்குரிமை நாடிய பின்றை' என்றது வினைவகையான் வேறாகு மாந்தனன்மை யறிந்தபின் என்பதாம் . அதற்குரியனாகச் செயல் என்றது அரசன் அதில் தலையிடாதிருத்தலை . தலைசிறந்த ஆற்றலும் தன்மானமுமுள்ள வினைத்தலைவரின் வினையில் தலையிடுவது . தெளிந்தான்கண் ஐயுறவு போல் தீங்கு விளைக்கு மாதலின் , அது தகாதென்றார் . அரசன் ஒருவனது வினையை மறைவாகக் கவனித்து வருவதுவேறு ; அதில் வெளிப்படையாகத் தலையிடுவது வேறு . ஒரு தகுந்த வினைத்தலைவனது வினையில் அரசன் தலையிடாது முழுப்பொறுப்பையும் அவனிடம் விட்டு விட்டால் , அவன் மகிழ்ச்சியும் பெருமையும் ஊக்கமுங் கொண்டு அதை முழுவெற்றியாகச்செய்து முடிப்பான் என்பது கருத்து.
மணக்குடவர்
இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக. இஃது ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது.
புலியூர்க் கேசிகன்
இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) |