குறள் (Kural) - 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
பொருள்
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Tamil Transliteration
Ithanai Ithanaal Ivanmutikkum Endraaindhu
Adhanai Avankan Vital.
மு.வரதராசனார்
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
கலைஞர்
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பரிமேலழகர்
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. (கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவிகொண்டு இவ்வாற்றலுள்ள இவன் செய்து முடிப்பான் என்று கூறுபடுத்தி யாராய்ந்து ; அதனை அவன் கண் விடல் - மூன்றும் பொருந்திய விடத்து அவ்வினையை அக்கருவியும் அவ்வாற்றலு முள்ள அவனிடம் ஒப்படைக்க. கருவியாவன: முதற்கருவி, துணைக்கருவி, பொருள், துணைவர் முதலியன. மூன்றும் பொருந்துதலாவது, வினைசெய்வானொடு வினைக்குரிய ஆற்றலும் கருவியும் சேர்தல், 'அவன்கண் விடல்' அவனை வினைக்குரியவனாக்குதல்.
மணக்குடவர்
இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக. இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) |