குறள் (Kural) - 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
பொருள்
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.
Tamil Transliteration
Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu
Eydha Unarndhu Seyal.
மு.வரதராசனார்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
கலைஞர்
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.
பரிமேலழகர்
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
செய்வானை நாடி - செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து ; வினைநாடி - பின்பு அவனாற் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து ; காலத்தோடு எய்த உணர்ந்து - அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமா றறிந்து ; செயல் - அவை பொருந்து மாயின் அவனை அவ்வினையின்கண் அரசன் ஆளுதலைச் செய்க. செய்வானது இலக்கணம் இவ்வதிகாரத்தின் முதல் முக்குறள்களிலும், வினையின் இயல்பு இதற்கு முந்திய குறளிலும், கூறப்பட்டன . காலத்தோடெய்தவுணர்த லாவது , இத்தன்மையன் இவ்வினையை இக்காலத்து இவ்வகையிற் செய்யின் இவ்வாறு முடியும் என்று கூட்டி நோக்கி உய்த்துணர்தல்.
மணக்குடவர்
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.
புலியூர்க் கேசிகன்
செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) |