குறள் (Kural) - 514

குறள் (Kural) 514
குறள் #514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

பொருள்
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

Tamil Transliteration
Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan
Veraakum Maandhar Palar.

மு.வரதராசனார்

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

கலைஞர்

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

பரிமேலழகர்

எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். (கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எனை வகையான் தேறியக் கண்ணும் - எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும் ; வினை வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் தன்மையால் தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர். ஒரு தனிப்பட்ட கொள்கையுடைய அரசியற் கட்சித்தலைவர் ஆளுநராக அமர்த்தப்பெறின் , அக்கட்சிக் கொள்கையை விட்டு விடுவதும் , நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்குவதும், தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசனால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசனைக் கவிழ்த்து விட்டுத் தாம் அரசராவதும் , இன்று நிகழ்வது போன்றே அன்றும் நிகழ்ந்தமையின் , 'வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்' என்றார் . தேனை வழித்தவன் புறங்கையை நாவால் வழிப்பது போல , பொருளின் அதிகாரச்சுவை கண்டபின் அதன் ஆசையால் இழுப்புண்டு மனந்திரிவது பெரும்பால் மாந்த ரியல்பாதலால் , எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து அமர்த்திய வினைத்தலைவர் வினையையும் இறுதிவரையில் விழிப்பாக மேற்பார்த்து வருவதும் , சிறிது வேறு பட்டவிடத்தும் அவரை வினையினின்று விலக்கிவிடுவதும் , இன்றியமையாதன வென்பதாம்.

மணக்குடவர்

எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.

புலியூர்க் கேசிகன்

எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal)