குறள் (Kural) - 513

குறள் (Kural) 513
குறள் #513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

பொருள்
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

Tamil Transliteration
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu.

மு.வரதராசனார்

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

கலைஞர்

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

பரிமேலழகர்

அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. (இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அன்பு - அரசனிடத்தன்பும் ; அறிவு - அரசனுக்கு ஆவனவற்றையும் வினைக்கு வேண்டிய வற்றையும் அறியும் அறிவும் ; தேற்றம் - வினைசெய்தற்கண் கலங்காமையும் ; அவாவின்மை - பொருள் கைசேர்ந்தவழியும் தீயவழியாற் பொருள் வருமிடத்தும் அதன்மேல் ஆசையின்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான் கட்டே தெளிவு - இந்நாற்குணங்களையும் உறுதியாகவுடையவன் மேலதே அரசன் வினையை விட்டிருக்குந் தெளிவாம். இந்நாற்குணமும் நன்கு உடையான் வினைக்கண் திறம்பானென்று அரசன் கருதுவனாகலின் , அவனிடத்ததே தெளிவென்று இடவுரிமைப்படுத்திக் கூறினார் . கண்ணது - கட்டு (கண்+ து) . ஏகாரம் தேற்றம்

மணக்குடவர்

அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான்மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.

புலியூர்க் கேசிகன்

அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal)