குறள் (Kural) - 512

குறள் (Kural) 512
குறள் #512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள்
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

Tamil Transliteration
Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai.

மு.வரதராசனார்

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

கலைஞர்

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

பரிமேலழகர்

வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க. (வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வாரி பெருக்கி - பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து ; வளம் படுத்து - அவற்றாற் செல்வத்தை வளர்த்து ; உற்றவை ஆராய்வான் - அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவனே ; வினை செய்க - அரசனுக்குத் தலைமை யமைச்சனாக விருந்து பணியாற்றுக. வருவாய்கள் அரசிறை (புரவுவரி ) , திறை , தண்டம் , புதையல் , உழவு , கால்நடைவளர்ப்பு , கைத்தொழில், வாணிகம் முதலியன . செல்வங்கள் அவற்றால் வருவனவும், அரசனுக்கும் குடிகட்கும் இன்பநுகர்ச்சிப்பொருட்டு அமைக்கப்படுவனவுமாம். இடையூறுகள் அரசியல் வினைஞர் , அரசன் சுற்றத்தார் , பகைவர் , கள்வர் , கொள்ளைக்காரர் , அஃறிணையுயிரிகள் , இயற்கை தெய்வம் என்றிவரால் வரும் நலிவும் இழப்பும் . அஃறிணையுயிரிகள் பூச்சிபுழுக்களும் காட்டு விலங்குகளும் போல்வன . இயற்கையால் நேர்வன வெள்ளப்பாழ் புயற்சேதம் முதலியன . தெய்வத்தால் வருவன கொள்ளை நோய் , பஞ்சம் முதலியன , இயற்கை யென்பது இயல்பாக நிகழ்வதன் மிகையென்றும் , தெய்வம் என்பது இயற்கைக்கும் மக்கள் தடுப்பிற்கும் அப்பாற்பட்ட தென்றும் , வேறுபாடறிக.

மணக்குடவர்

பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக. பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.

புலியூர்க் கேசிகன்

செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal)