குறள் (Kural) - 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
பொருள்
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.
Tamil Transliteration
Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha
Thanmaiyaan Aalap Patum.
மு.வரதராசனார்
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
சாலமன் பாப்பையா
ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
கலைஞர்
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.
பரிமேலழகர்
நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும். (தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் தனக்கிட்ட பணியில் அரசனுக்கு நல்லனவும் தீயனவு மானவற்றை ஆராய்ந்து ; நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பையுடையான் ; ஆளப்படும் - பின் அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச் சிறந்தவினைகளில் ஆளப்படுவான். நொதுமலாகவோ பகையாகவோ வுள்ள வேற்றரசனிடம் தூது போன விடத்துத் தன்னரசனுக்கு நன்மையாகவே வினைமுடித்தவன் , பின்னும் அவ்வியல்பினனாகவே யிருப்பானென்று நம்பப்பட்டு , அத்துறையிலும் அதுபோன்ற பொறுப்பு வாய்ந்தனவும் உயிர்நாடியானவுமான பிறதுறைகளிலும் ஆளப்படுவான் . இங்ஙனமே , விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயருக்கு நாகம நாயக்கன் இருந்தது போலன்றி , அவன் மகன் விசுவநாத நாயக்கன் இருந்ததுபோல் உண்மையான படைத்தலைவனே நிலையான படைத்தலைமைக்கு அமர்த்தப்படுவான் . 'புரிந்த' என்னும் இறந்த காலப் பெயரெச்சத்தால் , வினைக்குரியதகுதி யறிதற் பொருட்டு முன்னிட்ட பணியென்பது அறியப்படும்.
மணக்குடவர்
நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.
புலியூர்க் கேசிகன்
ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) |