குறள் (Kural) - 508

குறள் (Kural) 508
குறள் #508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

பொருள்
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

Tamil Transliteration
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum.

மு.வரதராசனார்

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

கலைஞர்

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

பரிமேலழகர்

பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு ; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். தொடர்பு தன் குடியோடியைந்த உறவு . தெளிதல் வினைத்தலைவனாக்குதல் . அவன் வினைக்கேட்டால் அரசனும் அவன் வழியினரும் அழிவர் என்பதாம் . நான்காம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன , தேரான்-எதிர்மறை முற்றெச்சம்.

மணக்குடவர்

பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

புலியூர்க் கேசிகன்

தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)