குறள் (Kural) - 509

குறள் (Kural) 509
குறள் #509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

பொருள்
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

Tamil Transliteration
Therarka Yaaraiyum Theraadhu Therndhapin
Theruka Therum Porul.

மு.வரதராசனார்

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

கலைஞர்

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

பரிமேலழகர்

யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; தேர்ந்தபின் தேறும் பொருள்தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க. உம்மை சிறப்பின்பாற் பட்டது . வினைவகையில் , 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.

மணக்குடவர்

யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.

புலியூர்க் கேசிகன்

ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)