குறள் (Kural) - 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
பொருள்
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
Tamil Transliteration
Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal
Pedhaimai Ellaan Tharum.
மு.வரதராசனார்
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.
சாலமன் பாப்பையா
அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.
கலைஞர்
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
பரிமேலழகர்
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும் (தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
காதன்மை கந்தா - பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு ; அறிவு அறியார்த் தேறுதல் - தம் வினைக்கு அறியவேண்டியவற்றை அறியாதாரைத் தெளிந்து அமர்த்துதல் ; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு அறியாமையால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும். அறிவிலாரைத் தனக்கு மவர்க்குமிடைப்பட்ட பேரன்பு பற்றிக் கண்ணோடி அரசன் வினைத்தலைவராக்கின், அவரால் வினை அடியோடு கெடும் . அதனால் , அரசன் கெடுவதுடன் வினையறியாதவன் , வினைக்குரியாரை அறியாதவன் , தன்னாக்கம் அறியாதவன் , குடிகள் நலமறியாதவன் எனப்பல அறியாமைப் பட்டங்களும் பெற நேரும் . ஆக என்னும் குறிப்புவினையெச்சவீறு 'ஆ' எனக்கடைக்குறைந்து நின்றது . 'பேதைமை' ஆகு பொருளது.
மணக்குடவர்
அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.
புலியூர்க் கேசிகன்
அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) |