குறள் (Kural) - 506

குறள் (Kural) 506
குறள் #506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

பொருள்
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

Tamil Transliteration
Atraaraith Therudhal Ompuka Matravar
Patrilar Naanaar Pazhi.

மு.வரதராசனார்

சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

சாலமன் பாப்பையா

உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

கலைஞர்

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

பரிமேலழகர்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிநாணார் - பழிக்கு அஞ்சார். பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும் , உற்றா ருறவினரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிராதென்பதும் , பொதுவான உலக நம்பிக்கை . ஆதலால் , அத்தகையோரை வினைக்கமர்த்தின் ,குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங் கெடும் என்பதாம் . 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது . ஓம்புதல் காத்தல் ; இங்கு நிகழாவாறு காத்தல்.

மணக்குடவர்

ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.

புலியூர்க் கேசிகன்

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)