குறள் (Kural) - 505

குறள் (Kural) 505
குறள் #505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பொருள்
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Tamil Transliteration
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal.

மு.வரதராசனார்

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

சாலமன் பாப்பையா

உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

கலைஞர்

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பரிமேலழகர்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும்,முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாயிருப்பது ; தம்தம் கருமமே - அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று. கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும் , உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து . ஆகவே , வினைத்திறமையுள்ளவனையே வினைக்கமர்த்துக என்பதாம் . "பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே," என்னும் அதி வீரராம பாண்டியன் கூற்று இக்குறட் சுருக்கமாகும். கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகித்துப் பெருமை சிறுமைகளை மாழை (உலோக) வகைகளாக உருவகியாது விட்டது ஒருமருங்குருவகம் . ஏகாரம் தேற்றம் , ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத்திறமின்றேல் அவற்றாற் பயனில்லை யென்பதாம் . பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் கரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்.

மணக்குடவர்

ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.

புலியூர்க் கேசிகன்

ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)