குறள் (Kural) - 504

குறள் (Kural) 504
குறள் #504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

Tamil Transliteration
Kunamnaatik Kutramum Naati Avatrul
Mikainaati Mikka Kolal.

மு.வரதராசனார்

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

கலைஞர்

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

பரிமேலழகர்

குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. (மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக. ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.

மணக்குடவர்

ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்.

புலியூர்க் கேசிகன்

ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)