குறள் (Kural) - 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
பொருள்
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.
Tamil Transliteration
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru.
மு.வரதராசனார்
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
சாலமன் பாப்பையா
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.
கலைஞர்
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.
பரிமேலழகர்
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - அரும் பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையுமாகிய குற்றங்கள் நீங்கியவரிடத்தும்; தெரியுங்கால் வெளிறுஇன்மை அரிதே - நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவுமில்லாமை காண்பது அரிதே. பிறரிடத்துள்ள குற்றம் போல் விளங்கித் தோன்றாமல் மிகச் சிற்றளவாயிருப்பதால் 'தெரியுங்கால்' என்றார் . எல்லாமறிந்தவரும் எக்குற்றமுமில்லாதவரும் இவ்வுலகத் தின்மையால் , குற்றமற்றவனையே வினைக்கமர்த்தவேண்டு மென்று மேன்மேலும் ஆராய்ந்து கொண்டிருப்பின், இது எல்லையின்றியோடி ஒரு முடிவிற்கும் வர இடந்தராதாதலால் , ஓரிரு சிறு குற்றங் குறைகளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது இன்றியமையாத திறமுங் குணமுமுடையவரை அமர்த்திவிடுக என்பதாம் . உள்ளீடில்லாத வெறுமைபோலிருத்தலால் அறியாமையும் , விளையாத வெண்மரம் போலிருத்தலாற் குற்றமும் , வெளிறெனப்பட்டன , உம்மை உயர்வு சிறப்பு ஏகாரம் தேற்றம் . வெள் - வெளி - வெளில் - வெளிறு. 'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.' (குறள் . 772.) "ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்." (குறள் . 133.) என்று ஆசிரியர் கூறியிருப்பதால் , குடி என்பது இங்குப்பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப்பிரிவினை பற்றிய சிறு வகுப்பன்று . மேலும் , சோழனொருவன் மந்திரிப் பதவிக்குத் தக்கவன் நால்வகுப்பாருள் எவ்வகுப்பான் என்று வினவியதற்குப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர். "நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு." என்று விடையிறுத்ததும் கவனிக்கத்தக்கது . இம் முடிபுப்படியே குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியைச் சேர்ந்த அருண்மொழித்தேவர் இரண்டாங் குலோத்துங்கச் சோழனின் தலைமையமைச்சராக அமர்த்தப் பெற்றார் போலும்.
மணக்குடவர்
கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
புலியூர்க் கேசிகன்
அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) |