குறள் (Kural) - 502

குறள் (Kural) 502
குறள் #502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

பொருள்
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

Tamil Transliteration
Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum
Naanutaiyaan Sutte Thelivu.

மு.வரதராசனார்

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

கலைஞர்

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. (குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

குடிப் பிறந்து - ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து ; குற்றத்தின் நீங்கி - நடுநிலையின்மை , விரைமதியின்மை அன்பின்மை , மடி , மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி , வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்குப் பழிவந்து விடுமோ என்று அஞ்சும் நாணுடையவ னிடத்ததே அரசனது தெளிவு. குடிப்பிறந்தார் வடுப்பரிதலை, "அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்." (நாலடி . 151.) என்பதாலறிக . நாண் இழிதொழில் பற்றிய நன்மக்கள் அருவருப்பு . "கருமத்தா னாணுத னாணு" (குறள். 1011 ) என்றமை காண்க . ஏகாரம் தேற்றம் . கண்ணது - கட்டு (கண் + து ) . 'குற்றத்தினீங்கி வடுப்பரியு நாண்' உண்மையுமின்மையும் நால்வகைத் தேர்விலும் வெளிப்பட்டுவிடும் . குடிப்பிறப்பு தக்கார் உரையாலும் உறவினராலும் அறியப்படும்.

மணக்குடவர்

உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு

புலியூர்க் கேசிகன்

நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal)