குறள் (Kural) - 498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
பொருள்
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
Tamil Transliteration
Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum.
மு.வரதராசனார்
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
சாலமன் பாப்பையா
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
கலைஞர்
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
பரிமேலழகர்
உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
சிறு படையான் செல் இடம் சேரின் - சிறுபடையான் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின் ; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படையரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினையொழிந்து திரும்புவான் . விடுதல் விட்டு நீங்குதல் , வினைக்கு இடமின்மையால் விடும் என்றார் . இது , உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய் , அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது . சிறுபடையான் புகுந்த இடத்திற்குச் செல்லும் வழி பெரும்படை செல்ல முடியாவாறு மிக ஒடுங்கியிருக்குமாதலாலும் , ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ செல்லத்துணியின் மேலிருந்தோ ஒரு கோடியில் நின்றோ சிறுபடை பெரும்படை முழுவதையும் வெட்டி வீழ்த்திவிடுமாதலாலும் , மலைவழியும் மரமடர்ந்த காட்டுவழியுமாயின் பெரும்படை வழிதெரியாது மயங்கி இடர்ப்பட நேருமாதலாலும் , 'ஊக்க மழிந்து விடும்' என்றார் . 1841 - ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆபுகானியப் போரில் , இந்தியப்படை முழுவதும் கைபர்க்கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத்தக்கது . 'உறு' உரிச்சொல் .
மணக்குடவர்
சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
புலியூர்க் கேசிகன்
சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | இடனறிதல் (Itanaridhal) |