குறள் (Kural) - 499

குறள் (Kural) 499
குறள் #499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

பொருள்
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

Tamil Transliteration
Sirainalanum Seerum Ilareninum Maandhar
Urainilaththotu Ottal Aridhu.

மு.வரதராசனார்

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

சாலமன் பாப்பையா

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

கலைஞர்

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

பரிமேலழகர்

சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. ('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற் கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும் ; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம் . ஒட்டல் பொருந்துதல் ; இங்குப் பொருந்திப் பொருதல் . ஆதலால் , பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம் . அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் . "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

மணக்குடவர்

அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடனறிதல் (Itanaridhal)