குறள் (Kural) - 497

குறள் (Kural) 497
குறள் #497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

பொருள்
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

Tamil Transliteration
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin.

மு.வரதராசனார்

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

கலைஞர்

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

பரிமேலழகர்

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. ('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின் ; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற்போதும் , வேறுதுணை வேண்டியதில்லை . மனத்திண்மையில்லாவிடத்து , இடமும் பிறவும் வாய்த்தும் பயனின்மையின் , அஞ்சாமையை இன்றியமையாத பெருந்துணையாகக் கூறினார் .

மணக்குடவர்

தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.

புலியூர்க் கேசிகன்

செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடனறிதல் (Itanaridhal)