குறள் (Kural) - 475

குறள் (Kural) 475
குறள் #475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

பொருள்
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

Tamil Transliteration
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin.

மு.வரதராசனார்

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

கலைஞர்

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

பரிமேலழகர்

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின். (உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் . மயில்தோகையும் அளவுக்கு மிஞ்சி வண்டியிலேற்றின் அச்சொடியும் என்பது , பகைவர் தனித்தனி மிகச்சிறியாராயினும் மிகப்பலர் ஒன்று கூடின் , தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்னும் பொருள்பட நிற்றலால் , பிறிதுமொழிதல் என்னும் அணியாம் .இது நுவலாநுவற்சியென்றும் ஒட்டு என்றுஞ் சொல்லப்படும் . பகைவர் சிறியராயினும் மிகப்பலரை ஒருங்கே பகைக்கக் கூடாதென்பதும் , பகைவர் வலியைத் தனித்தனி அறியாது தொகுத்தறிதல் வேண்டுமென்பதும் , இதனாற் கூறப்பட்டன . உம்மைஇழிவு சிறப்பு , சாகாடு என்பது சகடம் என்னும் சொல்லின் பல்வடிவுகளுள் ஒன்றாம் . இதுவுந்தென்சொல்லே . 'இறும்' என்னும் துணைவினை முதல்மேல் நின்றது , 'காலொடிந்தான்' என்பதில் ஒடிந்தான் என்பது போல . 'சாலமிகுத்து' மீமிசைச்சொல் .

மணக்குடவர்

பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வலியறிதல் (Valiyaridhal)