குறள் (Kural) - 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
பொருள்
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
Tamil Transliteration
Olva Tharivadhu Arindhadhan Kandhangich
Chelvaarkkuch Chellaadhadhu Il.
மு.வரதராசனார்
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.
கலைஞர்
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
பரிமேலழகர்
ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை. ('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒல்வது அறிவது அறிந்து - தம்மாற் செய்தற்கியலும் வினையையும் அதன் தொடர்பாக அறியவேண்டிய தெல்லாவற்றையும் அறிந்து ; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - அம்முயற்சியில் உறுதியாக மனத்தையூன்றிப் பகைமேற்செல்லும் அரசர்க்கு ; செல்லாதது இல் - முடியாதது ஒன்றும் இல்லை . 'ஒல்வது' எனவே நால்வகை வலியும் அடங்குதலின் , 'அறிவது' என்றது மேற்கொண்டு ஒற்றர் வாயிலாகப் பகைவர் நிலைமையைப் பற்றி அறியக்கூடிய புதுச்செய்திகளாகும் . 'செல்லாததில்' எனவே வெற்றி உறுதி என்பதாம் .
மணக்குடவர்
தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | வலியறிதல் (Valiyaridhal) |