குறள் (Kural) - 471

குறள் (Kural) 471
குறள் #471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

Tamil Transliteration
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal.

மு.வரதராசனார்

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

கலைஞர்

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

பரிமேலழகர்

வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. (இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வினைவலியும் - தான் செய்யத்துணிந்த வினைவலியையும் ; தன்வலியும் - அதைச் செய்தற்கிருக்கும் தன் வலியையும் ; மாற்றான் வலியும் - அதை எதிர்க்க வரும் பகைவன் வலியையும் ; துணைவலியும் - இருவர்க்குந் துணையாக வருவார் வலியையும் ; தூக்கிச்செயல் - ஆராய்ந்து பார்த்துத் தன்வலி மிகுமாயின் அவ்வினையைச் செய்க . இந்நால்வகை வலியுள் , வினைவலி படையெடுத்துச் செல்லுதலும் தாக்குதலும் அரண் முற்றுதலும் அதைப்பற்றுதலும் ஆகிய வினைகளாலும் , ஏனை மூன்றும் ஐவகை யாற்றல்களாலும் அளந்தாராயப்படும் . அதன் முடிபாகத் தன்வலி மிகுந்து தோன்றுமாயின் வினைசெய்வதென்று தீர்மானிக்கப்படும் . அஃதன்றிக் குறைந்து தோன்றுமாயின் தோல்வியுறுதியென்றும் , ஒத்துத்தோன்றுமாயின் வெற்றி ஐயுறவான தென்றும் , தெரிந்து வினைகைவிடப்படும் .

மணக்குடவர்

செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வலியறிதல் (Valiyaridhal)